விளைநிலம் வீடாய் வீடெல்லாம் கூடாய்
குளிர் அறைகள் குருவிகளை ஓட்டியதில்
புழுங்கி அழுகிறது மனது.
குருவிகள் அமராத மின்கம்பி
‘சாக்’ அடிக்கிறது உயிரில்.
நகரமயமாதலால் மயானமயமானது
குருவிகளின் தேசம்.
உயரப்பறந்த ஊர்க்குருவிகள் உயிர்த்துயராய்
கைபேசி கோபுர கதிர்வீச்சு.
பிளாஸ்டிக்பைகள் உமதுயிர் நெரித்ததால்
தொன்மை குருவிகளைத் தொலைத்து
திண்ணையில் காயும் அரிசியோடு காய்கிறது
காயப்பட்ட இயற்கை.
தானியங்களோடும் தண்ணீர் கிண்ணத்தோடும்
இன்றில்லை திண்ணை.
ஊறுசெய்துவிட்டு ஊர்க்குருவிகளை
ஊரெங்கும் தேடுகிறோம்.
கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகளை
பாரெங்கும் தேடுகிறோம் இதயபாரத்தோடு!
ஓடும் மின்விசிறியில் அடிபட்டு
செத்து விழுகிறது
தத்தித்தாவி கொத்தித்தின்னும்
மனையுறை குருவி பார்க்கும் கனவு.
விஞ்ஞான வளர்ச்சியில்
உரம், பூச்சிக்கொள்ளிகளுக்கு இரையானது
இன்று குருவிகள்....
நாளை.... மனிதன்!
No comments:
Post a Comment